Wednesday, September 13, 2006

ஆழ்வார் குறிப்பு II - நம்மாழ்வார்

ஆழ்வார்களில் தலையானவர் / முதன்மையானவர் எனக் கருதப்படுவதால் 'நம் ஆழ்வார்' (ஸ்ரீரங்கநாதனே 'என் அடியார்' என்ற பொருளில் இவரை அன்போடு அழைக்கும் பெயரும் கூட) எனப் பெயர் பெற்ற இவர் வேளாள வம்சத்தில் அவதரித்த வைணவ வித்து! இவர் 9-ஆம் நூற்றாண்டில், திருக்குருகூர் என்ற ஆழ்வார் திருநகரியில், பிரமாதி வருடத்தில், வைகாசி மாதத்தில், விசாக நட்சத்திரத்தில் தோன்றியவர். நம்மாழ்வார் வைகுண்டத்தின் தலைமைத் தளபதியாகக் கருதப்படும் விஸ்வக்ஷேனரின் அவதாரம் என்று கூறுவர்.

இவர் தந்தையார் பெயர் மாறன் காரி, தாய் உடைய நங்கையார் என்பவர். நம்மாழ்வாருக்கு பெற்றோர் இட்ட பெயர் மாறன் (சாதாரண மனித இயல்புகளுக்கு மாறானவன் / அப்பாற்பட்டவன் என்று பொருள் கொள்க!). இவ்வாழ்வார், சடகோபன், பராங்குசன், சடாரி, வாகுலபரணன், குருகையூர் கோன் என்றும் அறியப்படுகிறார். இதில் சடகோபன் என்ற பெயருக்குப் பின்னார் ஒரு சுவாரசியமான காரணம் உண்டு !
Photobucket - Video and Image Hosting
'சடம்' என்றால் காற்று. விரிவாக நோக்கினால், பிறக்கும் குழந்தையை 'முந்தைய ஜென்ம வினைகள்' சார்ந்த காற்று சூழும்போது அது குழந்தையின் முதல் அழுகைக்குக் காரணமாகிறது. ஆனால், நம்மாழ்வார் பிறந்ததும் அழவே இல்லையாம். அதனால் சடம் என்னும் காற்றை முறித்ததினால், அவருக்கு சடகோபன் என்ற பெயர் சூட்டப்பட்டது. அது போலவே, திருமாலின் திருவடியின் அம்சமாகக் கருதப்படுவதால், பெருமாளின் சன்னதிகளில் பக்தர்களின் தலையில் வைக்கப்படும் 'சடாரி'யாகவும் இவர் அறியப்படுகிறார். பக்தி என்கிற அங்குசத்தால் அந்த பரந்தாமனை தன் கட்டுக்குள் வைத்திருந்ததால், இவ்வாழ்வாருக்கு 'பராங்குசன்' என்ற காரணப்பெயர் உருவானது !

நம்மாழ்வார் ஓர் அசாதாரண குழந்தையாகத் திகழ்ந்தார். பிறந்த கணத்திலிருந்து குழந்தை கண்களை திறக்கவுமில்லை, எதுவும் உண்ணவுமில்லை. ஆனால், குழந்தை உடல் தேஜஸ¤டனே இருந்தது. பல நாட்கள், குழந்தை எதும் பேசாமலும் இருந்தது. மனமொடிந்து போன பெற்றோர், குருகூர் தெய்வமான ஆதி நாதர் கோயிலுக்குச் சென்று, குழந்தையை (வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுமாறு இறைவனிடம் வேண்டி) தரையில் விட்டபோது, அந்த தெய்வக் குழந்தை தவழ்ந்து சென்று கோயிலில் இருந்த புளியமரத்து பொந்தில் நுழைந்தது. அடுத்த 16 ஆண்டுகள், பத்மாசன கோலத்தில், ஆகாரமின்றி, நீரின்றி, அசைவின்றி, கண்மூடி, அந்த சூரியனே மனித உருவில் காட்சியளித்தது போல் பிரகாசத்துடன், அந்த புளியமரத்தின் அடியிலேயே நம்மாழ்வார் யோக நிலையில் வீற்றிருந்தார் !

அந்த கால கட்டத்தில், வட இந்தியாவில் இருந்த புண்ணியத் தலங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த மதுரகவி என்ற பண்டிதர், அயோத்தியின் தெற்கு வானத்தில் ஓர் அதி அற்புதமான ஒளியைக் கண்டார். அவ்வொளியின் மூலத்தை அறியும் விருப்பத்தில் தெற்கு நோக்கி பயணப்பட்டார். திருவரங்கத்தை அடைந்து இன்னும் சற்றே தெற்கில் உள்ள குருகூரை சென்றடைந்தபோது அப்பேரொளி புளிய மரத்தடியில் தவமிருந்த நம்மாழ்வாரின் திருமேனியில் கலந்திருப்பது மதுரகவிக்கு புலப்பட்டது!

தியானத்தில் இருந்த நம்மாழ்வரை பேச வைக்க மதுரகவி அவரை கூப்பிட்டுப் பார்த்தார், சப்தம் ஏற்படுத்திப் பார்த்தார். பலனில்லை ! தானே தண்ணொளி மிகு நிலையில் (state of enlightenment) இருந்த மதுரகவியார், நம்மாழ்வாரிடம் "செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால், எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?" என்ற கேள்வியை வீச, கண் திறந்த ஆழ்வார், "அத்தைத் தின்று அங்கே கிடக்கும்" என்றார். இந்த கேள்வி பதிலுக்கான உட்பொருள் ஆழமானது. எளிமையாக விளக்க வேண்டுமென்றால், பிறப்பின் போது, ஒரு ஆன்மா எந்த வகையான உடலுள் புகுகிறதோ அந்த உடலுக்கேற்ப அதன் தோற்றத்திற்கேற்ப மட்டுமே சுகதுக்கங்களை அடைய முடியும் என்றும், மெய்ஞ்ஞானத்தை உணர்வதென்பது அந்த உடம்புடன் சம்மந்தப்பட்ட குணநலன்களையும் சார்ந்தது என்றும் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம் ! அதாவது, முக்தி அடைவதற்கு, ஆன்மாவுக்கு கிடைக்கும் கூடும் முக்கியமாகிறது ! ஆன்மா உய்வுற ஒரு ஜென்மமும் ஆகலாம், பல ஜென்மங்களும் ஆகலாம் ! இங்கே, உடல் 'செத்தது' ஆகவும், ஆன்மா 'சிறியது' ஆகவும் உருவகப்படுத்தப்பட்டுள்ளது.

நம்மாழ்வாரின் அந்த பதிலைக் கேட்ட கணத்திலிருந்து, மதுரகவி அங்கேயே தங்கி, நம்மாழ்வாரின் பிரதான சீடராகி நம்மாழ்வர் அருளிச் செய்த திவ்யப்பாசுரங்களை பதிவு செய்ததும், அவருக்கு தொண்டு புரிந்ததும், பலரும் அறிந்ததே. பிரபந்தத்தில் மதுரகவி ஆழ்வாரின் பங்கு, 'கண்ணி நுண் சிறுதாம்பு' என்ற தலைப்பில் அமைந்த 11 பாசுரங்கள் மட்டுமே. இவை தனது குருவான நம்மாழ்வாரைப் போற்றி பாடியவை. குருகூர் கோயிலில் உள்ள புளிய மரம் 'உறங்கா புளி' என்றழைக்கப்படுகிறது. இந்த புளிய மரம் பூக்கும், ஆனால் காய்க்காது, மற்ற புளிய மரத்தை போல் இரவில் மூடிக் கொள்வதில்லை.

நம்மாழ்வார் நான்கு வேதங்களின் (ரிக், யஜுர் ,சாம, அதர்வண) சாரங்களையும் முறையே, திவ்யப்பிரபந்தத்தில் வரும் திருவிருத்தம் (100), திருவாசிரியம் (7), திருவாய்மொழி(1102) மற்றும் பெரிய திருவந்தாதி(87) ஆகியவற்றில் அமைந்த திவ்யப் பாசுரங்கள் வாயிலாக அருளிச் செய்துள்ளார். திருவாய்மொழி (தெய்வப் பேச்சு) பகவத் விஷயம் என்று அழைக்கப் படுகிறது. வைணவ பாரம்பரியத்தில் திருவாய்மொழிக்கு மிக உயரிய இடம் தரப்பட்டுள்ளதற்கு, இராமனுசரும், அவருக்கு பின்னால் வந்த வேதாந்த தேசிகரும், மணவாள மாமுனிகளும் காரணம் என்றால் அது மிகையில்லை. இராமானுசரின் முதன்மைச் சீடரான திருக்குருகைப் பிரான் பிள்ளான் திருவாய்மொழிக்கு ஓர் உரை எழுதியுள்ளார்.

நம்மாழ்வாரை வைணவர்கள் 'தமிழ் வேதம் தந்த ஆழ்வார்' எனப் போற்றுகின்றனர். வியாசாவதாரம் எடுத்துப் பிரம்ம சூத்திரங்களை இயற்றிய இறைவனே நம்மாழ்வாராக அவதரித்துத் அந்தப் பிரம்ம சூத்திரத்தினுடையவும், வேத வாக்கியங்களினுடையவும் அர்த்தங்களை விளக்க வேண்டி திருவாய்மொழியை அருளிச் செய்ததாக வைணவர்கள் நம்புகின்றனர். 'மன்னும் வழுதி வளநாடன் மாறன் திருக்குருகூர் சடகோபன் தமிழ்' என்று நாதமுனி குறிப்பிடுவதை வைத்து இவ்வாழ்வார் பாண்டிய மரபினர் என்று கூற முடியும்.

நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ள திவ்ய தேசங்கள் 37 ஆகும். இவற்றில் ஸ்ரீரங்கம், திருப்பேர்நகர், திருமாலிருஞ்சோலை, வடக்கிலுள்ள துவாரகை, திருப்பதி, திருக்குடந்தை, திருவிண்ணகர், திருக்கண்ணபுரம், தஞ்சை மாமணிக்கோயில், திருமோகூர் குறிப்பிடத்தக்கவை. பாற்கடல் வாழ் அரங்கன், 108 வைணவத் திருப்பதிகளில் கொண்ட திருக்கோலங்களோடு காட்சியளித்தது நம்மாழ்வார் ஒருவருக்கே!!! அதனால் தான் என்னவோ, இவ்வாழ்வார் திருக்குருகூர் கோயிலில் வீற்றிருந்தபடியே, அகக்கண்ணால் கண்ட காட்சிகளை வைத்து, 37 வைணவத் தலங்களைப் பற்றி திருப்பாசுரங்களை இயற்ற முடிந்தது போலும் !!!

நம்மாழ்வர் பாசுரங்களில் பக்திப் பேருவகையும் (ecstasy through devotion) ஸ்ரீவைகுண்டநாதன் மேல் அவருக்கு இருந்த கடலை ஒத்த பேரன்பும் காணப்படுகின்றன. ஒரு சமயம், நம்மாழ்வாரை அருள் பாலிக்க, மகாவிஷ்ணு அலைமகள் சமேதராய், சங்கு சக்ர தாரராய், கருடவாஹன ரூபராய் எதிர் வந்து நிற்க, 'கருமுகில் தாமரைக்காடு பூத்து நீடிரு சுடரிரு புறத்தேந்தி ஏடவீழ் திருவொடும் பொலிய ஓர் செம்பொற்குன்றின் மேல் வருவ போல் கலுழன் மேல் வந்து தோன்றிய' பெருமாளின் திருவடி பணிந்து நம்மாழ்வார் ஆனந்தப் பெருவெள்ளத்தில் ஆழ்ந்தார்.

பிறிதொரு சமயத்தில், நம்மாழ்வார் திருமாலை தனது பேரானந்த (அனுபூதி) நிலையில், "வேரும் வித்துமின்றித் தானே தன்னிலையறியாத் தொன் மிகு பெரு மர" என்று வியக்கிறார்! இங்கு திருமாலை மரமாக உருவகிக்கிறார். தொன் மரம் என்பதை - கால வரையறைக்கு உட்படாதது (timeless) என்றும், மிகு மரம் என்பதை வெளியின் வரையறைக்கு உட்படாதது (beyond space limitation) என்றும் பெரு மரம் என்பதை உருவ அளவுகளைக் கடந்தது (immeasurable) என்றும் கொள்ள வேண்டும் ! அதாவது பரம்பொருள் என்பது கால, வெளி அளவுகளைக் கடந்த ஒன்று என்பதைச் சொல்கிறார். தன்னை நாடி வந்தோர்க்கு, நல்லவர், தீயவர், எளியோர், பெரியோர் என்று பேதம் பாராமல் தண்ணிழலும், பழங்களும் தருவது மரத்தின் இயல்பாவது போல, மனித உயிர்கள் அனைத்தையும் அரவணைத்து பரமபதம் சேர்த்துக் கொள்வது வைகுந்தனின் குணமாகிறது.

ஆழ்வார் இப்பூமியில் 35 வருடங்களே வாழ்ந்தார். நம்மாழ்வார் திருப்பேர் நகரில் மோட்சம் அடைந்ததாக நம்பப்படுகிறது. திருவாய்மொழியின் இறுதியில் இவர் பாடிய பாசுரங்கள், இத்திருத்தலம் மற்றும் இங்கு எழுந்தருளியிருக்கும் பெருமானைப் பற்றியதே. நம்மாழ்வார் 'அர்ச்சராதி கதி' வாயிலாக பரமபதம் சேரவிருப்பது திருவாய்மொழியில் சொல்லப்பட்டுள்ளது ! திருப்பேர் நகர் பெருமானாகிய அப்பக்குடத்தான் மார்க்கண்டேயருக்கு இறவா வரம் தந்ததால், இத்தலத்தில் இருக்கும் தீர்த்தம் (குளம்) மிருத்யு விநாசினி என்றழைக்கப்படுகிறது.

சாம வேதத்தின் சாரமான திருவாய்மொழியிலிருந்து சில பாசுரங்களைக் காணலாம்.

****************************
வைகுந்தா மணிவண்ணனே* என்பொல்லாத் திருக்குறளா என்னுள்மன்னி,*
வைகும் வைகல்தோறும்* அமுதாய வானேறே,*
செய்குந்தா வருந்தீமை உன்னடியார்க்குத் தீர்த்து* அசுரர்க்குத் தீமைகள்-
செய்குந்தா* உன்னைநான் பிடித்தேன் கொள் சிக்கெனவே.


வைகுந்தன், மணிவண்ணன் என்ற நாமங்களைக் கொண்ட, குறும்புகள் பல செய்த, கோள்கள் பல சொன்ன, பொல்லாதவனே! அமுதத்தை ஒத்த வான் அரசனே! என் வாழ்வின் ஒவ்வொரு நாளும் என்னுள் நிறையவும், உன்னை சரணடைந்தவர்களின் துயர் நீக்கவும், அரக்கர்களை அழிக்கவும் உனை வேண்டினேன். உன்னிடம் வந்தடைந்த என்னை அழுத்தமாகப் (சிக்கென) பற்றிக் கொள்வாயாக!

*****************************
அடுத்து, உயரிய கருத்தைக் கொண்ட ஆழ்வாரின் இப்பாசுரத்தில், சாதி மத நல்லிணக்கத்தை வலியுறுத்துவதை காண முடிகிறது. அதாவது, பல வழிகளிலும் பரம்பொருளை அடைய முடியும் என்ற தத்துவத்தை சொல்கிறது !

அவரவர் தமதமது அறிவறி வகைவகை
அவரவர் இறையவர் எனவடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதிவழி அடையநின்றனரே.


அவரவர் தாங்கள் அறிந்த வகையில், தங்கள் கடவுளர் என்று பல வகைப்பட்ட தெய்வங்கள் முன் அடி பணிந்து தொழுகின்றனர். அவரவரின் கடவுளர்களும் குறையில்லாதவர்களே. அவரவர் விதிமுறைகளின் வாயிலாக அக்கடவுளர்களிடம் சென்றடைய அவர்கள் வணங்கி நிற்கின்றனர் !

*****************************
அடுத்து, வானவியலொட்டிய ஒரு நுட்பமான விஷயத்தை, ஒரு பாசுரத்தில் சொல்லியிருக்கிறார் !

ஆறு மலைக்கு எதிர்ந்து ஓடும் ஒலி,அர
வூறு சுலாய்மலை தேய்க்கும் ஒலிகடல்
மாறு சுழன்று அழைக் கின்ற ஒலிஅப்பன்
சாறு படஅமு தம்கொண்ட நான்றே. 7.4.2


மேலோட்டமாக பொருள் எடுத்தால், இப்பாசுரம் திருப்பாற் கடலை அமுது கடைந்த போது உண்டான ஒலிகளைப் பற்றிப் பேசுகிறது. அதாவது பேரொலிகள், வாசுகி என்னும் பாம்பு மந்தரம் என்னும் மலையுடன் உரசும் போது உண்டானது குறித்து பேசுகிறது.

அவரது மிகப் பிரம்மாண்டமான சித்தரிப்பிலிருந்தே தெரிந்து கொள்ளலாம், நம்மாழ்வார் சாதாரண மத்து கடைதலைப் பற்றி பேசவில்லை என்பது! ஓடும் நதியை, புவியீர்ப்பு விசை¨க்கு எதிராக திருப்ப்¢ மலைகளை நோக்கி ஓட வைக்க வேண்டுமெனில் எப்பேற்பட்ட பெரும் சக்தி கொண்டவையாக அப்பேரொலிகள் இருந்திருக்க வேண்டும்! பால்வெளியானது நெளிந்து ஓடும் ஒரு ஓடையை போன்றது என்று தெளிந்திருக்கிறோம். "கடல் மாறு சுழன்று" எனும்போது திருப்பாற் கடலே மாறுபட்டு சுற்றியதாகச் சொல்கிறார். சூரிய மண்டலத்தின் சுழற்சி பற்றி அப்போதே சொல்லியிருக்கிறார். பால்வெளியின் சுழற்சி வேகத்தை தாக்குப் பிடிக்க சூரிய மண்டலம் மட்டும் விநாடிக்கு 280 கிலோ மீட்டர் வேகத்தில் பால் வெளியின் உள் நோக்கிப் பாய்கிறது. நம்மாழ்வார் பேசுவது இந்த சுழற்சியைப் பற்றி!
********************************
இன்னும் சில திருவாய்மொழிப் பாசுரங்களின் பெருமை குறித்து அடுத்த பதிவில் பார்ப்போம்.

என்றென்றும் அன்புடன்
பாலா

நம்மாழ்வார் படத்திற்கு நன்றி: தேசிகன்

15 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

Test !

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஆகா
"வேதம் தமிழ் செய்தான் மாறன் சடகோபன்" என்னும் நம்மாழ்வார் பற்றி ரத்தினச் சுருக்கமாக சொல்லி உள்ளீர்கள், பாலா! நல்ல பதிவு!
நம்மாழ்வார் பற்றி சொல்ல வேண்டும் என்றால் கடல் அளவு. அதை முயன்ற அளவு நல்ல முறையில் தொகுத்து தந்து இருக்கிறீர்கள்!

இன்றும் எல்லா வைணவர் இல்லங்களிலும்
"அடியார்கள் வாழ அரங்கநகர் வாழ
சடகோபன் தண்டமிழ் நூல் வாழ"
என்னும் தினப் பாராயண பாடல் பாடுவது மரபு.
நம்மாழ்வாரின் நூல் வாழ வேண்டுவது ஏன் என்றால், அந்த நூலால் தான் மற்றைய ஆழ்வார்களின் பாசுரங்களும் நமக்குக் கிடைத்தன! உலகமே உய்ய தமிழில் மறையும் கிடைத்தது!

அவர் தம் "ஆயிரத்துள் ஒரு பத்தும்" பாடலை, ஒரு சிலர் பாடக் கேட்டுத் தான் நாதமுனிகள், மற்ற பிரபந்தங்களைத் தேடலானார். நம்மாழ்வார் அருளால் அனைத்து ஆழ்வார் பாடல்களும் நாதமுனிகளுக்கு கிடைத்தன; அதனால் நமக்கும் கிடைத்தன.
திருவாய்மொழிக்கு இழந்ததை மீட்டுக் கொடுக்கும் அளவுக்கு அவ்வளவு சிறப்பு!!

இதைப் பற்றியும் ஒரு பதிவு எழுத ஆசை. இப்போது தான் தமிழ் தட்டச்சு, தத்தித் தத்திப் பழக ஆரம்பித்து உள்ளேன். சிற்றறிவுக்கு எட்டியதை சீக்கிரமே எழுத வேண்டும். நம்மாழ்வார் திருவடிகளே சரணம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

வானவியலொட்டிய ஒரு நுட்பமான விஷயத்தை இன்று தான் கேள்விப்படுகிறேன், உங்கள் வாயிலாக.
மிக்க நன்றி! புரிந்து கொள்ள சற்று கடினப் பட்டேன்.

பாசுரங்களில் "*" குறிகள் வருகின்றனவே!
அவை பற்றி ஒரு சிறு குறிப்பும் நீங்களே சொல்லி விட்டால், சின்னப் பசங்க நாங்க கேட்டுக்கொள்வோம் :-)

//இன்னும் சில திருவாய்மொழிப் பாசுரங்களின் பெருமை குறித்து அடுத்த பதிவில் பார்ப்போம்//
காத்து இருக்கிறேன் அடுத்த பதிவுக்கு.

said...

Dear Bala,

Very nice one. Lot of wealthy information you have given in such a simple manner. Thanks for sharing all the valuble notes.

I have a humble request to you. If possible can you write more on the inner meanings of these pasurams. Somehow I feel there are more inner meanings to Alwar pasurams like getting rid of anger, jealousy, greed, lust...etc. In this way anyone who reads will try to understand the proper way of living in order to attain God realisation.

this is my humble suggestion only. if you feel this is beyond the scope of your blogging, my apologies for this suggetion.

Best Regards,
Raj Sadagopan

enRenRum-anbudan.BALA said...

kannabiran,
nanRi !
//"அடியார்கள் வாழ அரங்கநகர் வாழ
சடகோபன் தண்டமிழ் நூல் வாழ"
//
I forgot to quote this, thanks :)

//இதைப் பற்றியும் ஒரு பதிவு எழுத ஆசை. இப்போது தான் தமிழ் தட்டச்சு, தத்தித் தத்திப் பழக ஆரம்பித்து உள்ளேன். சிற்றறிவுக்கு எட்டியதை சீக்கிரமே எழுத வேண்டும்.
//
People like you MUST write on AzwArs and prabandham and related things ! I am waiting to read :)

Raj Sadagopan,
Thanks for your appreciation.

//I have a humble request to you. If possible can you write more on the inner meanings of these pasurams.
//
Let me see. One needs a lot of time and energy to do such a himalayan task in a proper manner !

said...

Very good post

வல்லிசிம்ஹன் said...

பாலா, நம்மாழ்வார் பற்றி எத்தனை படித்தாலும் போதாது.
எளிமையாகச் சொன்னதற்கு நன்றி.
குரு பரம்பரை முழுவதும் எழுத வேண்டும்.

enRenRum-anbudan.BALA said...

valli,

pArAttukku nanRi !

Sudhakar Kasturi said...

பாலா,
நீங்கள் அழைக்குமுன்னரே இன்று மதியம் இதனைப் படித்துவிட்டேன். விரிவாக எழுதவேண்டும் என்ற ஆவலில் கொஞ்சம் தள்ளிப்போட்டுவிட்டேன்..
மிக அருமையான தொடர். வார்த்தைகளுக்காகச் சொல்கிறேன் என எண்ணிவிடாதீர்கள். நிஜமாகவே உணர்ந்து சொல்கிறேன். வல்லி சொன்னதுபோல நம்மாழ்வார் பற்றிச் சொல்லி மாளாது. அப்பாடல்களின் ஆழமும், பக்தியின் தீவிரமும் ஒவ்வொரு பாடலிலும் உணர உணர மேலும் சவாலாக அமையும். என்னை மிகமிகக் கவர்ந்த பாடல்களில் பல நம்மாழ்வாருடையது.
" ஆணல்லன் பெண்ணல்லன் அல்லால் அலியுமல்லன்
காணலுமாகான். உளனல்லன் இல்லையல்லன்."
இதுவரை உபநிடத, வேதாந்த செறிவுகள் வருகின்றன என்றால், அடுத்த அடியில்
" பேணுங்கால் பேணும் உருவாகும் அல்லனுமாய்"
என்று சொல்வதில் எங்கோ சென்றுவிடுகிறார். இவ்வளவு ஜனநாயகப் பாங்கோடு " நீ பார்க்கும் விதத்தில் உருவாகும் தன்மையன்..அவ்வாறு உருவின்றி இருப்பதும் அவன் தன்மையாம்" எனச் சொல்வதில் அனைத்து விரிந்த மனநிலையின் ஆழங்களையும், உயரங்களையும் கடந்துவிடுகிறார். இன்னும் சொல்லச் சொல்ல விரியும். இது பின்னூட்டமில்லாது ஒரு வலைத்தளமளவிற்கு பெருகும்!
Transcending all limits என்பது இவருக்குப் பொருந்தும்.

பரபத்தி செய்யும் பாசுரங்களின் முதலான சீரிவரமங்கல நகர் மங்களாசாசனப் பத்துப்பாடல்கள் நம்மாழ்வார் சரணாகதியின் ஆதியைக் கோடிட்டுக்காட்டுகிறார் என்றால், "அகலுகில்லேன் இறையுமென்னும் அலர்மேல் மங்கை உறைமார்பன்" வேங்கடவனின் திருவடிகளில் சரணாகதியின் பரிமாணத்தை புடம்போட்டு விளக்குகிறார்.

ஆச்சார்ய ஹ்ருதயத்தில் முதல் பகுதி அவரது பாடல்களின் முக்கியத்தை விளக்குவதாக அமைந்திருக்கிறது. " க்ருஷ்ண க்ருஷ்ணாவைத்பாயனாத்பத்திகள் போலன்றே க்ருஷ்ணத்திருஷ்ணாத் தத்வ ஜென்மம்" என்பதில் அவரை க்ருஷ்ணன், வேதவ்யாசர் நிலையில் வைத்துக் கொண்டாடியிருக்கிறார் நாயனார்.
எவ்வளவோ சொல்லலாம்.. படிப்பது போலாகுமா?
மேலும் எழுதுங்கள். பாரட்டுக்கள்.
அன்புடன்
க.சுதாகர்.

enRenRum-anbudan.BALA said...

சுதாகர்,
விரிவான கருத்துக்களுக்கும், பாராட்டுக்கும் நன்றி. இது போன்ற பதிவுகள் எழுத நிறைய வாசிக்க வேண்டியுள்ளது, புரிந்து கொள்ள வேண்டியுள்ளது !
ஆழ்வார்களைப் பற்றி எழுதும்போது, அழகான, நுட்பமான பாசுரங்களை எடுத்துத் தரலாம் என்ற எண்ணமுண்டு. நன்றி.
எ.அ.பாலா

said...

பாலா,
கட்டுரை அருமை. சில தகவல்கள்
* நம்மாழ்வார் திருமாலின் திருவடியின் அம்சம் என்பதால் பெருமாள் சந்நதிகளில் வணங்கும்போது வைக்கும் 'சடாரி'யை சடகோபம் என்று சொல்கிறார்கள். ( நம்மாழ்வார் + சடாரி படம் இங்கே http://www.desikan.com/blogcms/wiki/media/navathirupathi/7_azhvar_nammazhvar.jpg )

* அதே போல் மணியின் அம்சமாக தேசிகனை கூறுவர். அதனால் தான் தென்கலை கோயில்களில் அது இருக்காது :-)

* திருமங்கை ஆழ்வார் காலத்தில், வைகுண்ட ஏகாதேசி உற்சவத்திற்கு, நம்மாழ்வார் திரு உருவ சிலை ஆழ்வார்திருநகரியிலிருந்து எடுத்துவரப்படுவது வழக்கம். ஸ்ரீரங்கத்தின் வெள்ளம் அடிக்கடி வருவதால் அந்த சிலைக்கு எதாவது ஆபத்து நேராமல் தடுக்க ராமாநுசர் ஸ்ரீரங்கத்திலேயே நம்மாழ்வார் சிலை ஒன்றை செய்து அந்த வழக்கத்தை மாற்றியமைத்தார். ( நாலாயிர திவ்யப் பிரபந்தத்தை எழுத நினைத்த நாதமுனிகள், மதுரகவி ஆழ்வாருடைய "கண்ணி நுண் சிறுத்தாம்பு" என்ற பத்து பாடலை பல்லாயிரம் முறை சேவித்தவுடன் நம்மாழ்வாரே நேரில் வந்து அருள நாதமுனி அவற்றை எழுதினார் என்று கூறப்படுகிறது. நம்மாழ்வார் மூலவர் வடிவம் தாமிரபரணி நீரை காய்ச்சி அதில் மதுரகவி ஆழ்வார் தன் சக்திகளை அளித்து உருவாக்கிய சிற்பம் என்று நம்பப்படுகிறது.)

* உறங்கா புளி மரம் படம் இங்கே ( http://www.desikan.com/blogcms/wiki/media/navathirupathi/7_azhvar_urangapuli3.jpg )

குமரன் (Kumaran) said...

பாலா, நம்மாழ்வாருக்கு இன்னொரு ஏற்றமும் உண்டு. அவர் ஆழ்வார்களிலேயே தலைமையானவர் மட்டுமன்று. அவர் ஆசார்யர்களிலும் தலைமையானவர். வைஷ்ணவ குருபரம்பரையில் திருமகள் நாதன் முதல் ஆசார்யன்; திருமகள் இரண்டாவது; விஷ்வக்ஷேனர் மூன்றாவது; நம்மாழ்வார் நான்காவது ஆசார்யர். நாதமுனிகள் ஐந்தாவது. பின்னர் அவரிடமிருந்து யாமுன முனிக்கும் உடையவருக்கும் வேதாந்த தேசிகருக்கும் மணவாள மாமுனிக்கும் என வைஷ்ணவ ஆசார்ய பரம்பரை செல்கிறது. இப்படி ஆழ்வாராகவும் ஆசார்யராகவும் ஒரே நேரத்தில் இருப்பவர் நம்மாழ்வார் மட்டுமே. வைணவர்களின் குல முதல்வன் என்றும் போற்றப்படுபவர்.


மிக நன்றாக நம்மாழ்வாரின் பெருமையை விரித்து எழுதியிருக்கிறீர்கள். மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டியது. குறைந்தது மூன்று முறையாவது படித்திருப்பேன்.

கம்பனாட்டாழ்வான் தன்னுடைய இராமாவதாரம் என்னும் காவியத்தை அரங்கேற்றுவதற்காக திருவரங்கம் வந்த போது அர்ச்சக ரூபமாய் அரங்கன் கம்பரிடம் ‘நம் சடகோபனைப் பாடினையோ’ என்று கேட்டதாகவும் கம்பர் ‘சடகோபரந்தாதி’ பாடி அரங்கேற்றியப் பின்னரே அரங்கநாயகியின் திருமுன் இராமாவதாரம் அரங்கேற்றம் செய்யப்பட்டதாகவும் ஒரு குறிப்பு படித்திருக்கிறேன். குருகைப்பிரான் காரி மாறன் சடகோபன் இந்த நிகழ்ச்சிக்குப் பின்னரே நம்மாழ்வார் என்று அறியப்பட்டார் என்று எண்ணுகிறேன். அது நால் வரை அவரை நம்மாழ்வார் என்று அழைத்தவர் இல்லை.

வைகாசி விசாகம் என்றால் முருகனின் திருவவதார நாள் என்று நினைவிற்கு வருவது போல் தற்போதெல்லாம் அது நம்மாழ்வாரின் திருவவதார நாளும் என்று நினைவில் நிற்கிறது.

பராங்குசன் என்ற திருப்பெயருக்கு நீங்கள் தந்திருக்கும் விளக்கம் அருமை. இது நாள் வரை அது பரகாலன் – எதிரிக்களுக்கு யமனைப் போன்றவர் – என்று திருமங்கையாழ்வாரைச் சொல்வார்களே அது போலவே பராங்குசன் – எதிரிகள் எனும் யானைகளுக்கு அங்குசம் போன்றவர் – என்பதும் என்று எண்ணியிருந்தேன்.

மதுரகவி ஆழ்வாரும் நம்மாழ்வாரும் சந்திக்கும் நிகழ்ச்சியைப் பற்றி முன்பு ஒரு பதிவு எழுதியிருந்தேன். முடிந்தால் பாருங்கள்.

http://koodal1.blogspot.com/2006/01/129_25.html

அருமையான பாசுரங்களை எடுத்துப் பொருள் சொல்லியிருக்கிறீர்கள். ஒவ்வொன்றும் ஒரு முத்து. அமுதம்.

குமரன் (Kumaran) said...

// அதே போல் மணியின் அம்சமாக தேசிகனை கூறுவர். அதனால் தான் தென்கலை கோயில்களில் அது இருக்காது :-)
//

தேசிகன். நான் வேறு மாதிரியாகக் கேள்விப்பட்டிருக்கிறேனே. திருவேங்கடமுடையானின் திருமணி அம்சம் தான் வேதாந்த தேசிகன் என்பதால் திருவேங்கடவன் திருமுன் (சன்னிதி) மட்டும் திருமணி பயன்படுத்துவதில்லை என்பது தான் நான் கேள்விப்பட்டது. திருவேங்கடம் திருமலை தென்கலை கோயில் என்பது தற்செயல் என்று தான் எண்ணியிருந்தேன். நீங்கள் இப்போது எந்தத் தென்கலை கோவிலிலும் திருமணி இல்லை என்பது செய்தி. மதுரை கூடல் அழகர் திருக்கோயில் தென்கலை கோயிலே. அங்கு திருமணியைப் பார்த்ததாக நினைவு.

enRenRum-anbudan.BALA said...

Dear Desikan,

Thanks for the information

Dear Kumaran,
Thanks for a detailed comment. I will respond in detail, tomorrow.

enRenRum anbudan
BALA

said...

சூப்பரப்பு!

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails